×

சத்தியமங்கலத்தில் உதவித்தொகை வழங்க கோரி மூதாட்டி திடீர் தர்ணா

சத்தியமங்கலம், ஜூலை 16:  சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (60). இவரது கணவர் கிட்டான். இவர், கடந்த 2007ம் ஆண்டு இறந்தார். கிட்டான் கட்டிட தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்ததால் இயற்கை மரணம் அடைந்ததற்கு வழங்கப்படும் உதவித்தொகை வழங்கக்கோரி காளியம்மாள் ஈரோடு கட்டிடத் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி ஒப்புகைச்சீட்டை வழங்கினர். ஆனால், பல ஆண்டு ஆகியும் இதுவரை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து காளியம்மாள் பலமுறை ஈரோடு சென்று அதிகாரிகளிடம் கேட்டபோது சத்தியமங்கலத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலர்கள் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.

இதையடுத்து காளியம்மாள் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்திற்கு சென்றார். பலமுறை சென்றும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தது. இதையடுத்து நேற்று மதியம் அங்கு சென்ற காளியம்மாள் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஏஐடியூசி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட துணைசெயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காளியம்மாளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து காளியம்மாள் போராட்டத்தை கைவிட்டார்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை