கன்னிமார் காட்டில் கஞ்சா விற்பனை போதையில் வடமாநில தொழிலாளர்கள்

ஈரோடு, ஜூலை16:  சித்தோடு அருகே கன்னிமார்காடு என்ற இடத்தில் வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஈரோடு அடுத்துள்ள சித்தோடு நல்லக்கவுண்டன்பாளையம் கிராமம் கன்னிமார்காடு என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், ஏராளமான குடும்பங்கள் குடிசை போட்டு கடந்த ஓராண்டாக வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 4,800 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. .  இந்த கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அங்கு தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள இப்பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் எந்த நேரமும் வடமாநில தொழிலாளர்கள் போதையிலேயே சுற்றித்திரிவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Advertising
Advertising

 இரவு நேரங்களில் போதையில் அங்கு குடியிருக்கும் பொதுமக்களிடம் தகராறு செய்வது, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை கும்பல் செயல்பட்டு வருவது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தங்கி உள்ளதால் இவர்களை குறி வைத்து ஒரு கும்பல் மது, கஞ்சா உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. கஞ்சா, மது விற்பனை செய்யும் கும்பல்களை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். இது தொடர்பாக சித்தோடு போலீசில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. போதையில் உலா வரும் வடமாநில தொழிலாளர்களால் பெண்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: