கோயில் வளாகத்தில் மது அருந்திய விவகாரம் டெய்லர் கொலை வழக்கில் 2 பேர் கைது

திருப்பூர், ஜூலை 16: திருப்பூரில் கோயில் வளாகத்தில் மது அருந்திய 6 வாலிபர்களை மர்ம கும்பல் கத்தியால் குத்தியதில் பனியன் கம்பெனி டெய்லர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (25). இவர் திருப்பூர் பெரியாண்டிபாளையம், நாச்சியம்மன் நகர் பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.  நேற்றுமுன்தினம் இரவு பெரியாண்டிபாளையம் கருப்பராயன் கோவில் வளாகத்தில் காலி இடத்தில் அருள் மற்றும் அவரின் நண்பர்கள் 2 பேருடன் அமர்ந்து மது அருந்தினர். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அதே பகுதியில் அமர்ந்து மது அருந்திய வட மாநிலத்தவர்களை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது குறித்து அருள் அந்த கும்பலிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருளை குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அந்த கும்பல் அதே பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த விக்னேஷ் (22), ஏழுமலை (25), ராஜமாணிக்கம் (21), பிரகாஷ் (21), பார்த்தீபன் (21) ஆகிய 5 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு காரில் தப்பினர்.

இது குறித்து தகவலறிந்த திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 5 பேரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் வளையங்காடு பகுதியை சேர்ந்த வருண்குமார் (19), ஆகாஸ் (19) ஆகிய இருவரையும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: