×

சந்திராயனை பார்வையிட ஆந்திரா சென்ற திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

திருப்பூர், ஜூலை 16: சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்வையிடச் சென்ற திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5, 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சந்திராயன்-2 தொடர்பான கட்டுரைப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற 5ம் வகுப்பு மாணவர்கள் முகம்மது தாஹூர், சந்தோஷ், 6ம் வகுப்பு மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோரை சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதைப் நேரில் பார்ப்பதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

 இதையடுத்து, இஸ்ரோ இணையதளத்தில் கடந்த 4ம் தேதி விண்ணப்பித்து அனுமதியும் பெற்றனர். இதைதொடர்ந்து, அந்தப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணனுடன், மாணவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சென்றனர். பின்னர் விண்வெளி மையம், ராக்கெட் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2.51 சந்திராயன்- 2 விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதனிடையே, விண்ணில் செலுத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கவுன்டவுன் நிறுத்தப்பட்டது. இதனால் சந்திராயன்-2 விண்கலம் செலுத்தப்படுவதைப் பார்க்கச் சென்ற மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா