குளம் அமைக்க அனுமதி வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருப்பூர், ஜூலை16:திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.திருப்பூர் கொடுவாய் அருகே செட்டிப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் பாறைக்குழி உள்ளது.பாறைக்குழி அருகில் மேற்புறமாக மண்மேடு உள்ளது. மண்மேட்டை அப்புறப்படுத்தி தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வழி வகைகள் உள்ளது. ஆகையால், அந்த இடத்தை குளமாக அமைப்பதற்கு ஊர் பொதுமக்கள் பங்களிப்போடு நிதி திரட்ட  தயாராக உள்ளோம். அதற்கு தடுப்பு அணைகள் கட்டுவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகையால், அரசு குளம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு, தேவையானவற்றை நாங்களே செய்ய தயாராக இருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து குளம் அமைக்க விரைவில் அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை அளித்த மனு: உடுமலை அருகே கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வல்லக்குண்டாபுரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமல் ஒரே வீட்டில் பலர் வசிக்கின்றனர். எனவே, எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். மேலும் தற்போது நத்தம் புறம்போக்கு நிலங்கள் இந்த கிராமத்தில் இல்லை. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தனியார் நிலத்தை விலைக்கு வாங்கி, ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டனர்.விஜயாபுரம் பொதுமக்கள் அளித்த மனு: விஜயாபுரம் தெற்கு வீதியில் பொதுப்பணித் துறை சார்பாக 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கு மண் பரிசோதனை செய்ய மாதிரி எடுத்து செல்கின்றனர். தண்ணீர் தொட்டி அமையும் இடம் பழைய மண்சுவரால் ஆன ஓட்டு வீடுகள் நிறைந்த பகுதியாகும். மேலும் மக்கள் பயன்படுத்தும் சாலையில் உள்ளது. மேலும், அது பாறை உள்ள பகுதி, பாறகளை அகற்ற அவர்கள் துளையிடும் போது வீடுகள் சேதம் அடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே தண்ணீர் தொட்டி அமையும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

திருப்பூர் செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறோம். நாங்கள் முன்பணம் செலுத்தும் தவணை முறையில் பணம் செலுத்தி இங்கு வீட்டு மனை வாங்கினோம். ஆனால் இதுவரை அங்கு வீடு கிரையம் செய்து கொடுக்கவில்லை. மேலும் எங்களது பகுதியில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்துகொண்டிருக்கிறோம். எனவே எங்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

Related Stories: