மஞ்சூர் மேல்பஜாரிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்

மஞ்சூர், ஜூலை 16:  மஞ்சூர் கீழ்குந்தா சாலையில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கண்டதைபோல் மேல்பஜாரிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.   மஞ்சூர் மேல்பஜார் பகுதியானது அப்பர்பவானி, கிண்ணக்கொரை, இரியசீகை, தாய்சோலா, பிக்கட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் சாலையில் உள்ளது. இப்பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி, அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, கூட்டுறவு வங்கி, பேரூராட்சி அலுவலகம், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளிட்டவை உள்ளது. இந்த சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படும். தற்போது நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மஞ்சூர் அட்டி பிரிவில் இருந்து பள்ளிமனை பிரிவு வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.  இது தவிர அரசு மேல்நிலை பள்ளி முதல் மகளிர் உயர்நிலை பள்ளி வரை சாலையோரத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மஞ்சூர் கீழ்குந்தா சாலையில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததை தொடர்ந்து சமீபத்தில் மஞ்சூர் போலீசார் இந்த சாலையின் ஒருபுறம் கூம்பு வடிவ டிவைடர்களை அமைத்து போக்குவரத்து பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தனர்.  அதேபோல் மேல்பஜார் பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது பெண்கள் ஹெல்மெட் அணிந்து பேரணி