கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை

ஊட்டி, ஜூலை 16: ஊட்டி எல்க்ஹில் பகுதிக்கு மீண்டும் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதார் கார்டுகளை ஒப்படைப்பதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட எல்க்ஹில், குமரன் நகர் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலி தொழிலாளர்கள். ஊட்டி நகரில் இருந்து சுமார் 4கி.மீ., தொலைவில் எல்க்ஹில் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டவுன் பஸ்கள் சென்று வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு ஆட்டோக்கள் மூலமாகவே வந்து செல்ல வேண்டியுள்ளது. மக்களின் நலன் கருதி சில ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்த கட்டணத்தில், எல்க்ஹில் பகுதிக்கு ஆட்டோ இயக்கி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக   சில ஆட்டோ ஓட்டுநர்கள் எல்க்ஹில் பகுதிக்கு குறைந்த கட்டணத்தில் ஆட்டோ ஓட்ட கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. அவ்வாறு குறைந்த கட்டணத்திற்கு சென்று வரும் ஆட்ேடா ஓட்டுநர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.  இதனால் எல்க்ஹில் பகுதிக்கு குறைந்த கட்டணத்தில் ஆட்ேடா இயக்க முடியாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. எல்க்ஹில் பகுதிக்கு மீண்டும் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏராளமான பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

Tags :
× RELATED வறட்சி எதிரொலி வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்