×

ஆக.,15 முதல் பிளாஸ்டிக் தடை ஆயத்த கூட்டம் நடத்த வியாபாரிகள் கோரிக்கை

ஊட்டி, ஜூலை 16: நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை திக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றர்.   கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. மேலும், நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.  வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் பாட்டில்கள் மாவட்டத்திற்குள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எல்லைக்குள் இந்த தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மேல், தண்ணீர் பாட்டில்களை கொண்டு வர முடியாது. அதற்கு பதிலாக அவர்கள் ஸ்டீல், கண்ணாடி அல்லது தடை செய்யப்படாத தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், அதாவது மீண்டும் பயன்படுத்தக் கூடிய பாட்டில்களை மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், சுற்றுலா பயணிகள் தண்ணீர் பிரச்னையை தீர்க்க சுற்றுலா தலங்களில் ஆங்காங்கே வாட்டர் ஏடிஎம்.,களையும் மாவட்ட நிர்வாகம் அமைத்து வருகிறது. ஒரு சில வியாபாரிகள் தற்போதே தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையை குறைத்துள்ளனர். ஆனால், சில வியாபாரிகள் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவைகள் மட்டுமே விற்பனை செய்து வரும் நிலையில், அவர்களின் பிழைப்பு கேள்வி குறியாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லாது தண்ணீர் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கையை முன்னதாகவே மேற்கொள்வது அவசியம். வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து தெரியாத நிலையில், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தனியார் தண்ணீர் மற்றும் குளிர்பான நிறுவனங்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் மாற்று வழிகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  இதற்காக மாவட்ட நிர்வாகம் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி, பிளாஸ்டிக் தடை குறித்தும் மாற்று ஏற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி