×

குன்னூர் ஆற்றில் 12 ஆயிரம் டன் குப்பை அகற்றம்

குன்னூர், ஜூலை 16: குன்னூர் ஆற்றை தூய்மை செய்யும் பணியில் கிளீன் குன்னூர் இயக்கத்தினர் ஈடுபட்டனர். இவர்கள் 36 நாட்களில் 12ஆயிரம் டன் குப்பைகள் அகற்றி உள்ளனர்.  குன்னூர் வழியே செல்லக்கூடிய ஆற்றில் மக்கள் கொட்டிய பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியில் கிளீன் குன்னூர் என்ற தன்னார்வ இயக்கத்தினர் இணைந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர் ஆறு பல்வேறு மலைகளை கடந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையில் உள்ள மலைப்பாதையின் வழியே பயணித்து பவானிசாகர் அணையை சென்றடைகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை பாதையில் உள்ள வனவிலங்குகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது.

  தற்போது குன்னூர் பொதுமக்கள் ஆற்றில் அதிகளவு குப்பைகளை கொட்டி வந்ததால், நீர் கடுமையாக மாசடைந்து வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிளீன் குன்னூர் என்ற தன்னார்வலர்கள் இணைந்து இந்த ஆற்றினை பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதில் வீசப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.    இதுகுறித்து கிளீன் குன்னூர் இயக்கத்தின் இயக்குனர் சமந்தா அய்யனா கூறுகையில், ‘‘36 நாட்கள் நடைபெற்ற இந்த பணியில் ஆற்றில் 1.5 கி.மீ., தொலைவு வரை பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.  இதில் 12 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலும் துணி உள்ளிட்ட குப்பைகள் அதிகளவில் இருந்தன. ஆற்றில் இருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு மறுசுழற்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று நீராதாரங்களை மாசுபடுத்துவதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் ஏற்படும்,’’ என்றார்.   மேலும் ஆற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். கிளீன் குன்னூர் தன்னார்வ இயக்கத்தினருக்கு குன்னூர் பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்