×

முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது ரயில்வே மேம்பாலம் வருமா, வராதா?

சிவகாசி, ஜூலை 16: சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் சிவகாசி தொகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவகாசி அருகே சாட்சியாபுரம், செங்கமலநாச்சியார்புரம் சாலை, திருத்தங்கல் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்வே கேட் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களும், பட்டாசு, தீப்பெட்டி ஆலை மற்றும் அச்சகத் தொழிலாளர்களும் கடந்து செல்கின்றனர். ரயில்கள் கடந்து செல்ல வசதியாக கேட் அடிக்கடி மூடப்படுவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

சாட்சியாபுரம், திருத்தங்கல் இரண்டு பகுதிகளிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். தமிழக முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து சிவகாசி அருகே சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. முதல்வர் அறிவித்த ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இங்கு ரயில்வே மேம்பாலம் வருமா வரதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

என்.ஜி.ஓ காலனி செல்லத்துரை கூறுகையில், ‘‘காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சிவகாசி மேற்குபகுதி சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், ஹவுசிங் போர்டு, இந்திராநகர், ஸ்டேட் பாங்க் காலனி, இ.பி.காலனி பகுதியில் இருந்து அரை மணி நேரத்திற்குள், 10 ஆயிரம் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து டூவீலர், கார்களில் வருகின்றனர். பரபரப்பாக ஓடும் இந்த நேரத்தில்தான் மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி செல்லும் பயணிகள் ரயிலும் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயிலும் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. அப்போது ரயில்வே கேட் பூட்டப்படும் போது சுமார் 15 நிமிடங்கள் காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், டூவீலர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கும். நெருக்கடியான நேரத்தில், ரயில்வே கேட்டில், போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்த, போதிய போக்குவரத்து போலீசாரும் இருப்பது இல்லை. கேட் திறந்தவுடன், ஒருவரை ஒருவர் முண்டியடித்து, கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

திருத்தங்கல் அருண்பாண்டி கூறுகையில், ‘‘  கடந்த வாரம் ரயில்வே கேட் கடக்கும் போது ஒன்றோடு ஒன்று வாகனங்கள் மோதியதில் ஒரு சிறுவன் கால் பலத்த காயம் அடைந்தான். சிவகாசி மேற்கு பகுதி மக்கள் ரயில்வே கேட் பூட்டப்படும்போது சிரமம் இன்றி நகருக்குள் வருவதற்கு, மாற்று ஏற்பாடாக ரயில்வே கேட் அருகே தற்காலிக தீர்வாக ரயில்வே தரைப்பாலம் அமைக்க வேண்டும்.  இதன் மூலம் டூவீலர்கள், ஆட்டோக்கள், சிறிய ரக வாகனங்கள் தரைப்பாலம் வழியாக எளிதாக செல்ல முடியும். நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...