×

லேப்டாப் வழங்கக்கோரி பள்ளிகளை முற்றுகையிட்ட மாணவிகள்

காரியாபட்டி, ஜூலை 16: காரியாபட்டி, சாத்தூரில் லேப்டாப் வழங்கக்கோரி மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டனர்.  
தமிழகத்தில் முன்னாள் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. லேப்டாப் வழங்கக்கோரி தமிழகம்  முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரியாபட்டியில் அரசு மகளிர் பள்ளி முன்னாள் மாணவிகள் லேப்டாப் தராததால் நேற்று பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர்  சமையன் தலைமை தாங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ வினோத் மாவட்ட நிர்வாகத்திடம் கூறி ேலப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் மடிக்கணினி வழங்க வேண்டும்;   அப்படி வழங்கவில்லை என்றால் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களையும் திரட்டி விருதுநகர் முதன்மை கல்வி மாவட்ட அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்துவோம் என்று கூறி களைந்துசென்றனர்.இதேபோல் சாத்தூரில் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியை முன்னாள் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். பள்ளி தலைமையாசிரியை மூன்று மாதத்தில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதில் சமரசம் அடையாத மாணவிகள் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் விருதுநகர் சென்று கலெக்டரிடம் லேப்டாப் கேட்டு மனு கொடுத்தனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு