×

திருச்சுழியில் திறந்தவெளியில் ஒதுங்கும் மக்கள்

திருச்சுழி, ஜூலை 16: திருச்சுழி பகுதியில் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
திருச்சுழி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் வீடுகளில் கழிப்பறை கட்டப்படாமல் ரோட்டோரங்களில் கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமங்களில் கழிப்பறைகள் பயன்படுத்துவது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.  இதனால் கிராமத்தில் இருபாலரும் ரோட்டோரங்களை திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர். இதனால் கிராமங்களில் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது.

மக்கள் கூறுகையில், கிராமத்திலுள்ள சுகாதார வளாகங்களில்  சிறு அளவில் பழுது ஏற்பட்டால் கூட அவற்றை பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை உள்ளாட்சிகளிடம் இல்லை. ரோட்டோரங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்துவதால் கிராமத்தின் பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டு, அதையொட்டிய குடியிருப்புகளில் நிரந்தரமாக நோய்கள் பரவி மக்களை வாட்டுகிறது.  இது தவிர நீர் நிலைகளான குளம், குட்டைகளில் மனித கழிவுகள் கலந்து கால்நடை, மனிதர்களும் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர்.  குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மாசு கலந்து அவலம் தொடர்கிறது.   

  நோய் எங்கிருந்து பரவுகிறது என்பதை புரிந்து கொண்டு தீர்வு காண்பதற்கு பல  மாதங்களாகி விடுகிறது.  இந்த அவலங்களுக்கு முக்கிய காரணம் கழிப்பறை வசதிகள் போதிய அளவு இல்லாததுதான்.  இரவில் கழிப்பறை செல்லும் பாதைகளில் சரியான தெரு விளக்கு வசதிகள் இல்லாததால் இருளை கடந்து செல்ல அச்சப்பட்டு, திறந்த வெளியை பல ஊர்களில் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். திறந்த வெளி கழிப்பிடங்களை தடுக்க அப்பகுதிகளில் தெரு விளக்கானது மிக அவசியம்.  தனிநபர் கழிப்பறை கட்ட பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசு நிதி உதவிகளை வழங்குகிறது.  ஆனாலும் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடிவதில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...