×

சிவகாசி நகராட்சி பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

சிவகாசி, ஜூலை 16: சிவகாசி நகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் சரிவர நடைபெறாததால் வாறுகால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால்  அவதிப்படுகின்றனர். சிவகாசி நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் சுகாதார பணிகள் சரிவர நடைபெறாததால் குப்கை கழிவுகள், வாறுகால்  கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. பகல் 10 மணி வரை நகரில் பல இடங்களில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதன் பின்னர் சுகாதார பணியாளர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குப்பை கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் வலைகள் விரிக்காமல் செல்வதால் சாலை முழுவதும்  குப்பை சிதறி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நகரின் பல இடங்களில் மாத கணக்கில் வாறுகால் கழிவுநீர் அகற்றப்படாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வாறுகால் நிரம்பி தெருக்களிலும், சாலைகளிலும் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிவகாசி வடக்கு ரத  வீதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். நகரின் முக்கிய சாலையான இங்கு உணவு கடைகள், பல சரக்கு கடை, மருத்துவமனை, காய்கறி விற்பனை கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வாறுகால் நிரம்பி  கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி ஓடுகிறது.

இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார கேடு உண்டாகி வருகிறது. மருத்துவமனை வரும் நோயாளிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். உணவு கடைகள், காய்கறி கடைகளிலும் சாலையில் ஓடும் கழிவு நீரால் துர்நாற்றம்  வீசுகிறது. இதனால் கடைகளுக்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர்.  
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கண்ணன்  கூறுகையில், நகரின் முக்கிய வீதியில் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரில் எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.  முக்கிய வீதியில் இது போன்று சுகாதார கேடு உள்ளதால் வெளியூர் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.  இதனால் இப்பகுதியில் உள்ள உணவு கடைகள், காய்கறி கடைகளுக்கு மக்கள் வர தயக்கம் காட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் வாறுகால் கழிவு நீரை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்திட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...