×

ஜூலையில் ‘சித்திரை வெயில்’

தேனி, ஜூலை 16: ஜூலை மாதம் சாரல் மழை பெய்ய வேண்டிய குளிர்ச்சியான பருவத்தில் தேனியில் ‛சித்திரை வெயில்’ வாட்டுவதால் கம்மங்கூழ் வியாபாரம் களைகட்டி உள்ளது. தேனி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த காற்று வீசும். லேசான சாரல் இருக்கும். மாவட்டத்தின் நான்கு பகுதிகளிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் மினி கொடைக்கானல் போன்று தேனி மாவட்ட பருவநிலை அனைவரையும் கவரும்.ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஜூலை 16ம் தேதியை எட்டி விட்ட நிலையிலும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. மாறாக காற்றில் ஈரப்பதம் குறைந்து அனல்காற்று வீசுகிறது. சித்திரை மாதம் கோடையில் கொழுத்தும் வெயிலின் தாக்கம் தற்போதய ஜூலையிலும் தொடர்கிறது. இதனால் கண்மாய், குளங்கள் வறண்டு, விளைநிலங்கள் காய்ந்து கிடக்கின்றன என விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் வியாபாரம் இல்லை என வியாபாரிகளும் புலம்புகின்றனர். ஆனால், தேனி நகரில் வெயிலில் அலையும் மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் கம்மங்கூழ், மோர் கடைகளுக்கு அதிகம் செல்கின்றனர். எனவே, இக்கடைகளில் வியாபாரம் களைகட்டுகிறது. வழக்கமாக ஜூலையில் வியாபாரம் இருக்காது. இந்த ஆண்டு எங்களுக்கு வியாபாரம் அதிகம் உள்ளது என கம்மங்கூழ் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு