×

சிவகங்கை கல்லூரியில் ஆங்கில துறைக்கு 2 ஷிப்ட் வேண்டும் மாணவர்கள் வலியுறுத்தல்


சிவகங்கை, ஜூலை 16:  சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் ஆங்கில துறைக்கு இளங்கலை மற்றும் முதுகலையில் இரண்டு ஷிப்ட் தொடங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் இரண்டு சுழற்சிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். முதல்நிலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட 11 துறைகள் உள்ளன. இதில் 10 துறைகளுக்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் உள்ளன. இளங்கலை பிரிவிற்கு பல்வேறு பாடங்களுக்கு சுமார் 880 பேர் வரை சேர்க்கை நடைபெறும். மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வில் பாடப்பிரிவு வழங்கப்படும்.

இந்த ஆண்டு கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இக்கல்லூரி இரண்டு ஷிப்டாக நடந்து வருகிறது. இதனால் கூடுதல் மாணவர்கள் படிக்க முடிகிறது. இங்கு மொத்தமுள்ள 11 துறைகளில் ஆங்கிலம் தவிர பிற பாடங்களின் அனைத்து துறைகளுக்கும் இரண்டு ஷிப்ட் உள்ளது. ஒரு ஷிப்டில் 50 மாணவர்கள் படிக்கலாம். இரண்டு ஷிப்ட் எனில் 100 மாணவர்கள் படிக்கலாம். ஆனால் ஆங்கில துறைக்கு இரண்டு ஷிப்ட் இல்லாமல் ஒரு ஷிப்ட் மட்டுமே இருப்பதால் ஆண்டுதோறும் 50 மாணவர்கள் மட்டுமே ஆங்கில பாடப்பிரிவை படிக்க முடிகிறது.  இளங்கலை, முதுநிலை இரண்டிலும் இதேநிலை தான். எனவே ஆங்கில துறையும் இரண்டு ஷிப்ட்டிலும் இயங்கும் வகையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தி மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. முன்பு வேறு பாடப்பிரிவு கிடைக்க வில்லையெனில் இறுதியாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கு வரும் நிலை இருந்தது. தற்போது மாணவர்களின் முதல் தேர்வாக கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால் சிவகங்கை போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் போதிய அரசு கலைக்கல்லூரிகள் இல்லை.  எனவே இருக்கும் கல்லூரிகளில் மாணவர் இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னர் துரைச்சிங்கம் அரசு கல்லூரி ஆங்கில துறைக்கும் மட்டும் இரண்டு ஷிப்ட் இல்லை. இத்துறைக்கும் இரண்டு ஷிப்ட்களில் வகுப்பு நடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கூடுதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா