×

கிராமத்தை வேறு வார்டுக்கு மாற்ற எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் மறியல்

சிவகங்கை, ஜூலை 16:  திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் முதுவன் திடல் கிராமத்தை வேறு வார்டிற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுவன்திடல் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். சுமார் 20நிமிடம் சாலையில் அமர்ந்திருந்த கிராமத்தினரிடம் சிவகங்கை டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்ற அவர்கள் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முதுவன்திடல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண்.14ல் ஏற்கனவே எங்கள் கிராமம் தலைமை கிராமமாக உள்ளது.

இந்நிலையில் 13வது வார்டுக்கு எங்கள் கிராமம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  எனவே எங்கள் கிராமத்தை தற்போது இணைக்கப்பட்டுள்ள 13வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதை ரத்து செய்து முந்தைய நிலைப்படி 14வது வார்டிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து களவு ஆய்வு செய்தும், கிராமத்தினரிடம் கருத்து கேட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்