×

காரைக்குடி நகரில் போலீசார் பற்றக்குறையால் செக்போஸ்ட்களுக்கு ‘மூடுவிழா’ எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்குடி, ஜூலை 16: காரைக்குடி நகரின் நுழைவு வாயில் மற்றும் முக்கிய பகுதிகள் நகரின் எல்லைகளில் கேமராவுடன் செக்போஸ்ட் அமைக்கப்பட்டும் ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கும் அவலநிலை உள்ளது. இதனால் குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தப்பிச்செல்ல எளிதாகிறது.  
காரைக்குடி பகுதி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் பெருகிவரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வீட்டை உடைத்து திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. சில சம்பவங்களுக்கு பொதுமக்கள் பிடித்து கொடுத்து அதன் பின்பே துப்பு துலங்கப்பட்டுள்ளது.  செயின் பறிப்பு உள்பட பல வழக்குகளுக்கு புகார் மட்டும் பெற்றுக்கொண்டு முறையாக எப்.ஐ.ஆர் போடுவது கிடையாது. பல திருட்டு வழக்குகளுக்கு திருட்டு போன பொருளை குறைத்து எப்.ஐ.ஆர் பதிவு செய்வதாகவும் புகார் உள்ளது.

 நகரில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நண்பகல் வேலையிலும் இரவு நேரத்திலுமே அதிகளவில் நடந்துள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்க வசதியாக நகரின் நுழைவுவாயிலான கோவிலூர், ஓ.சிறுவயல் ரோடு, திருச்சி பைபாஸ் ரோடு (லீடர்ஸ் பள்ளி அருகே), அழகப்பா அறிவியல் வளாகம் அருகே, கோட்டையூர், காரைக்குடி புதுவயல் ரோடு, நகரின் எல்லையான புதுவயல் அறந்தாங்கி சாலை ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமராவுடன் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவிலூர் செக்போஸ்ட்களில் மட்டுமே 24 மணி நேரமும் கண்காணிப்பு உள்ளது. பல செக்போஸ்ட்கள் போலீசார் இல்லாமல் மூடி கிடக்கிறது. சோதனை சாவடிகளில் முறையான வாகன சோதனை செய்தால் குற்றசம்பவங்கள் குறையலாம்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சமீபகாலமாக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கைது செய்யப்படும் குற்றவாளிகளின் படங்கள் பத்திரிக்கைகளில் வந்துவிடாமல் பாதுகாப்பத்தில் போலீசார் கவனமாக செயல்படுகின்றனர். இது அவர்களுக்கு சாதகமாக முடிந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாத நிலை உள்ளது. இரவு நேர ரோந்து பணியை இன்னும் தீவிரமாக்க வேண்டும். பார்மா காலனி பகுதியில் காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மே 7 முதல் 17 வரை நடக்கிறது