×

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீரில் உவர்ப்பு தன்மை அதிகரிப்பு கடலோர உவர் ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவல்

ராமநாதபுரம், ஜூலை 16: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உவர்ப்பு தன்மை அதிகரித்து வருவதாகவும் வரும் காலங்களில் விவசாயத்திற்கு பயன்படாத சூழ்நிலை உள்ளதாக கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய போராசிரியை பேபிராணி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை வழக்கத்தை விட  குறைவாகவே பெய்துள்ளது. இதனால் கடும் வறட்சியே தொடர்கிற நிலையில், மாவட்டத்தில் பெரும்பகுதி நிலத்தடி நீர் குறைந்து உவர்ப்புத் தன்மை மற்றும் குளோரைடு தன்மை அதிகரித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.சுமார் 70 சதவீதம் மண் தன்மை மாறியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மண் தன்மை குறித்த ஆய்வும் நடத்தப்பட்டு அவற்றின் முடிவுகள் அடிப்படையில் மண் தன்மையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் கடலோர மாவட்டம் என்பதால் மண் தன்மையை ஆராய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 1991ம் ஆண்டு முதலே கடலோர உவர் மண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் மூலம் கண்டறியப்பட்ட ஆய்வின் அடிப்படையிலே விவசாயத்துக்கான நெல் பயிர்களும் புதிதாக மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் மண் தன்மை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உவர் மண் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியை பேரிராணி கூறுகையில், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் மண், உவர், களர் மண், களிமண் ஆகியவைகள் உள்ளன. மாவட்டத்தின் மொத்த விவசாயப் பரப்பான 4.31 லட்சம் ஏக்கரில் 2.71 லட்சம் ஏக்கர் மானாவாரி விவசாய நிலமாகும். ஆனால், பெரும்பகுதி நிலங்கள் எளிதாக விவசாயத்துக்கு பயன்படாத வகையில் அவற்றின் தன்மை மாறிவிட்டது தெரிகிறது. ஆகவே விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக மாற்றும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், பெரும்பாலானோர் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்வதால் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. நிலத்தை தொடர்ச்சியாக உழுது வைத்திருந்தால்தான் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும், ஆடு, மாடுகளை வளர்த்தாலும் அவற்றுக்கு இறையாக இழை, தழைகள் அவசியம். அதற்காக நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வது கட்டாயமாகிறது. உவர் மணல் கலந்து தன்மை மாறிவரும் நிலத்தில் இழை, தழைகள் மற்றும் தாவரங்களின் பாகங்களை மக்கி தெளிப்பதன் மூலமே அவற்றை விவசாயத்துக்கு ஏற்றதாக மாற்ற முடியும்.ராமநாதபுரத்தில் ஓடைகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து பெறப்படும் மணல் கூட தன்மை மாறிவிட்டது. மண் தன்மை குறித்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள மண் ஆய்வகத்தில் ரூ.5 கட்டணத்தில் பரிசோதிக்கலாம். ஆனால், தனியார் யாரும் பரிசோதனைக்கு வருவதில்லை’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை