×

அங்கன்வாடி மையத்தில் பட்டுப்போன மரம் அகற்றம் தினகரன் செய்தி எதிரொலி

பரமக்குடி, ஜூலை 16: பரமக்குடி கருணாநிதிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் வாசலில் பட்டுப்போன மரத்தால் குழந்தைகளின் உயிர் பலிபோகும் நிலை உள்ளதாக தினகரனில் கடந்த5ம் தேதி செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மரத்தை அகற்றினர்.
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கருணாநிதிபுரத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் தற்போது 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்தின் அருகே ரேசன் கடையும் உள்ளதால் அங்கன்வாடி குழந்தைகள் மரத்திற்கு கீழ் விளையாடி வந்தனர். மரம் முழுவதும் பட்டுப்போய் எப்போது விழும் என்ற நிலையில் இருந்ததாக தினகரனில் கடந்த 5ம் தேதி செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை பார்வையிட்டனர். குழந்தைகளின் உயிரை பலிவாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரத்தை அகற்றுவதற்கு நகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்தின் உத்தரவை பெற்று நேற்று மரம் அடியோடு வெட்டி அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை