×

மண்டபம் கடற்கரை பூங்கா அருகே வீணாகி வரும் காவிரி குடிநீர்

ராமேஸ்வரம், ஜூலை 16:  ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செம்மமடம் பகுதியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மண்டபம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் கடற்கரை பூங்கா அருகில் அமைந்துள்ள காவிரி கூட்டுக் குடிநீர் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டிக்கு வந்து சேரும் காவிரி நீர் அங்கிருந்து பாம்பன் பாலத்தின் வழியாக ராமேஸ்வரம் வருகிறது. நிலத்திற்கு கீழே பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கொண்டு வரப்படும் நீர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பின் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின் அங்கிருந்து ராமேஸ்வரம் நகர் பகுதியில் பல இடங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.

மண்டபத்தில் இருந்து பாம்பன் சாலைப்பாலம் வழியாக குழாய் மூலம் வரும் குடிநீர் பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்திற்கு கீழே பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் வருகிறது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் பல இடங்களில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு காவிரி நீர் செல்லும் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் குடிநீர் வீணாக வெளியேறுவதும், பின் சீர் செய்யப்படுவதும் அவ்வப்போது நடக்கிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் அருகிலுள்ள செம்மடம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்திற்கு கீழே குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக காவிரி தண்ணீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. தண்ணீர் கொண்டு வரப்படும் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் இதனை சீர் செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். மழை பெய்யாததால் நிலத்தடி நீர் குறைந்து கிணறுகளிலும் உப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகளும் இப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பல நூறு கி.மீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி நீர் பல இடங்களில் வீணாக வெளியேறி வருவதை தடுக்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை