×

குடிநீர், பஸ் நிழற்குடை வேண்டும் தீயனூர் மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம், ஜூலை 16:  பரமக்குடி தாலுகா தீயனூர் கிராமத்தில் குடிநீர், நிழற்குடை என அடிப்படை வசதிகள் இல்லை என கலெக்டரிடம் மனு அளிக்க ஏராளமான கிராம பொதுமக்கள் வந்திருந்தனர். மனுவில், எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள்,ஆண்கள் அனைவரும் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறோம். தீண்டாமை ஒழிப்பு கிராமம் என அரசு ரூ.10 லட்சம் நிதி கலெக்டர் மூலமாக வழங்கப்பட்டது. அந்த பணத்தை எங்கள் கிராமத்திற்கு முறையாக பயன்படுத்தாமல் ஊராட்சி செயலாளர் வெவ்வேறு தீர்மானத்தை ஏற்றி செலவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்களால் எந்த பயனும் எங்களுக்கு கிடையாது.
கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக 600 அடி போர்வெல் அமைத்து தெருக்களில் குழாய் மூலமாக தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் தீயனூர் காலனி பஸ் ஸ்டாபில் நிழற்குடை இல்லை. காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. ஒரு பஸ் ஸ்டாப் உள்ள காலனி பகுதியில் நிழற்குடை அமைத்து தரவேண்டும்.

கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாத ஊராட்சி செயலாளரை மாற்றவேண்டும என மூன்று மனு அளித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் குழுவை சேர்ந்த கனகவள்ளி கூறுகையில், தீயனூர் கிராமத்தில் அனைத்து பிரிவினரும் வாழ்ந்து வருகிறோம். சுமார் 150 குடும்பங்கள் உள்ள எங்கள் கிராமத்தில் உள்ள பொதுக்கிணற்றில் எல்லா ஜாதியினரும் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். தீண்டாமை ஓழிப்பு கிராமமாக உள்ளதால் அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது. கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கிராமத்திற்கு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தாமல் உள்ளது. தினசரி தேவைக்காக குடம் ரூ.10 என வாங்குகிறோம். தண்ணீர் கஷ்டத்தை போக்க போர்வெல் அமைக்க வேண்டும். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கலெக்டர் நேரடி பார்வையில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை