×

பாதாள சாக்கடை பணியை முடித்து தேரோட்டத்தை நடத்த வேண்டும் ராமேஸ்வரம் பக்தர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம், ஜூலை 16:  நாட்டின் புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேஸ்வரத்தில் ஆடி தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் உள்ளதாகவும், கலெக்டர் இடையூகளை அகற்றி தேரை வலம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மனு அளித்துள்ளனர்.
இதுபற்றி ராமேஸ்வரத்தை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயில் ராமர் பூஜை செய்த இடம் மற்றும் சுற்றுலாதலமாக  உள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். கோயிலில் ஆடி மாதம் நடத்தப்படும் திருவிழாவின் போது முக்கிய விழாவாக தேரோட்டம் நடைபெறும். இந்நிகழ்ச்சியை காண வடமாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

ரமேஸ்வரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில்  கோயிலை சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும்  பணி நடைபெற்று வருகிறது. அனைத்து தெருக்களிலும் ரோட்டை தோண்டி நடைபெறும்  பணிகள் மிகவும் மந்த நிலையிலேயே உள்ளது. கோயிலை வலம் வரும் பக்தர்கள் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். ராமேஸ்வரத்திற்கு மத்திய, மாநில அமைச்சர்கள், முதல் அமைச்சர்கள் வரும் போது போர்கால அடிப்படையில் அனைத்து சாலைகளும் சரி செய்கிறார்கள். கடவுளுக்காக செய்ய மறுக்கிறார்கள். அதிகாரிகளின் அலச்சியத்தால் ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் தேரோட்டம் நடைபெறுமா என சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடிந்து தேரோட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை