‘100’ வேலையில் புதிய அட்டை கோரி உசிலம்பட்டி யூனியன் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

உசிலம்பட்டி, ஜூலை 16: நூறு நாள் வேலையில் புதிய அட்டை கோரி உசிலம்பட்டி யூனியன் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் காட்டுராஜா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராமர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையில் அரசு நிர்ணயித்துள்ள முழு சம்பளத்தை வழங்க வேண்டும், சம்பள நிலுவை தொகையை வழங்க வேண்டும், புதிய அட்டைகளை உடனே வழங்க வேண்டும், வேலைகளை சொந்த ஊரிலே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆணையாளர்கள் தாமோதரன், பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவு கொடுத்தனர். அதன்பிறகே மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: