ஆறுமுகநேரியில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடியில் திணறும் நான்குசாலை சந்திப்பு பொதுமக்கள் கடும் அவதி

ஆறுமுகநேரி, ஜூலை 16: ஆறுமுகநேரியில் காலை, மாலை வேளைகளில் நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் திணறும் அவலம் தொடர்கிறது.     தூத்துக்குடியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருச்செந்தூர்கோயில் மற்றும் சுற்றுலா தலமான மனப்பாடு, உவரி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு ஆறுமுகநேரியை கடந்துதான் செல்ல வேண்டும்.  மேலும் ஒரு நாளைக்கு 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்  பஸ்கள் இவ்வழியாக இயக்கப்படுகிறது. மற்றும் காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆறுமுகநேரியில் நான்கு முக்கிய சாலைகளிலும் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

 இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் ஆறுமுகநேரி நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இச்சமயங்களில் நான்கு சந்திப்பில் பொதுமக்கள், மற்றும் மாணவிகள் கடந்து செல்வது மிக சிரமமாக உள்ளது.  நான்கு வழிகளிலும் வாகனங்கள் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது மட்டும் காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  அவர்கள் சென்ற பின்னர் காவலர்களும் சென்றுவிடுகிறார்கள்.  எனவே, இப்பகுதியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இச்சாலையை எளிதாக கடப்பதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: