உயர்மின் கோபுர பணி நிறுத்தக்கோரி டெல்லியில் 3 நாட்கள் போராட்டம் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு

க.பரமத்தி, ஜூலை 16: விவசாயிகள் எதிர்ப்பை மீறி உயர்மின் கோபுர பணிகள் நடைபெறுவதால் அவற்றை தடுத்திட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட உழவர்கள் டெல்லியில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்கள் போராட்டம் நடத்த போவதாக உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.இது குறித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவின் மாநில செயலாளருமான ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய கோரிக்கைகளான ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள உயர் மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஆண்டு வாடகை வழங்க வேண்டும். தற்போது தமிழக விவசாயிகள் கடுமையாக ஆட்சேபித்து வரும் உயர் மின்கோபுரத் திட்டங்கள், எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை சாலையோரமாக புதைவடமாக அமைக்கக்கோரியும், விவசாயிகளின் நில உரிமை மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமைகளை கடுமையாக பாதிக்கும் இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், விவசாயிகளின் கோரிக்கைகள், பிரச்னைகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நாட்டின் கவனத்தை ஈர்க்க வேண்டி வரும் ஜூலை 22, 23, 24ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் முழக்கப்போராட்டம் நடத்துவதென்றும், அதேசமயம் மத்திய மின்சார துறை, சுற்றுச்சூழல் துறை, வேளாண் துறை, சட்டத் துறை அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்த உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தாந்தோணிமலை- ஏமூர் இடையே குண்டும்,...