×

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்

கிருஷ்ணகிரி, ஜூலை 16: மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிருஷ்ணகிரி கேவிகே வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படைப்புழுவின் தாக்குதல் சுமார் 60 வகையான பயிர்களில் கண்டறியப்பட்டுள்ளது. இவை தாக்குதலுக்கு மிகவும் விரும்புவது புல் வகைப் பயிர்களே ஆகும். மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம், சோளம் மற்றும் புல் வகைகளில் இதன் தாக்குதல் அதிகம் தென்படும். இவற்றை தவிர பருத்தி, சிறுதானியங்கள், நிலக்கடலை, கரும்பு, சோயாபீன்ஸ், புகையிலை மற்றும் கோதுமையிலும் இதன் தாக்குதல் பரவலாக தென்படும். காய்கறி பயிர்களை அதிகம் விரும்பாவிட்டாலும் அதிலும் இவை பாதிப்பை உண்டாக்கும். இந்த புழுவால் பாதிக்கப்படும் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும். காற்றின் மூலம் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் இலை உறைகளையும், முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும் அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.
இதனை கட்டுப்படுத்த, உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்க இயலும். மண்ணின் வளம் மற்றும் ஈரப்பதத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிகளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். விதை நேர்த்தி செய்வது ஆரம்பகட்டத்தில் பாதிப்பை தவிர்க்க இயலும். காலம் தாழ்த்தி பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரு பகுதியில் விவசாயிகள் ஒரே சமயத்தில் பயிர் செய்வது நல்லது. பருவம் தாழ்த்தி பயிர் செய்வதால் பாதிப்பு அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு நிலைகளில் மக்காச்சோளம் இருந்தால் புழுக்களுக்கு உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும். இதனை தவிர்க்க வேண்டும். முதல் மழையை உபயோகித்து மக்காச்சோளம் நடுவது படைப்புழுவின் பாதிப்பை குறைக்க இயலும். வயலைச் சுற்றியும் பயறு வகை மரப்பயிர்கள் அல்லது ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களை தடுப்பு பயிராக விதைக்கலாம். இவை படைப்புழுவின் இயற்கை எதிரிகளை உருவாக்கும்.
மேலும், நேப்பியர் புல்லை வயலைச் சுற்றிலும் வரப்பு பயிராக நடுவதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை நேப்பியர் புல்லில் முட்டைகளை வைக்கச் செய்யலாம். நேப்பியர் புல்லில் குறைவான சத்துள்ளதால் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் வளர்ச்சி குறைந்து இறந்துவிடும். மக்காச்சோளத்துடன் மரவள்ளி அல்லது பீன்ஸ், காராமணி, மொச்சை போன்ற படைப்புழுவால் அதிகம் விரும்பப்படாத பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்யலாம். குறுகிய கால மக்காச்சோள ரகங்களை பயிரிடுவது படைப்புழுவின் பாதிப்பில் இருந்து தவிர்க்க இயலும். வயலைச் சுற்றியும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும். பாதிப்பு அதிகமாகும் போது, பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 2.0 மி.லி.லி அல்லது ஸ்பைனோசேட் 0.5 மி.லி.லி, குளோர் ஆண்டிரிநில்ப்ரோல் 0.3 மி.லி.லி, இன்டாக்சாகார்ப் 1.0 மி.லி.லி, ஏமாமெக்டின் பென்ஜோயேட் 0.4 கி/லி இதில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லிகளை உபயோகித்து பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்
குறைபாடுகளை களைய வேண்டும்கிருஷ்ணகிரி, ஜூலை 16:  மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நான்காம் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். இணை செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். வேலூர் மண்டல செயலாளர் பிச்சுமணி துவக்கி வைத்து பேசினார். திட்ட செயலாளர் முனிரத்தினம், திட்ட பொருளாளர் சந்திரன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.  மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், தர்மபுரி திட்ட செயலாளர் விஜயன், கிருஷ்ணகிரி திட்ட செயலாளர் கருணாநிதி வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநிலத்தலைவர் சின்னசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். 2003ம் ஆண்டுக்கு பின்பு பணி நிரந்தரம் பெற்றவர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை சேர்த்து, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தணிக்கை பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, ஓய்வூதியர்களின் பிரச்னைகளை காலதாமதமின்றி தீர்த்து வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்