×

அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது எம்பிபிஎஸ் படிக்க நிதியுதவி கேட்கும் தொழிலாளி மகள்

நாமக்கல், ஜூலை 16:  அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்தும்,  கல்லூரில் சேர வசதியில்லை. எனவே, நிதிஉதவி பெற்றுத்தரும்படி, காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த மாணவி, நேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினார். சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் ரிக் வண்டியில் தொழிலாளர்களுக்கு சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா. இவர் விவசாய கூலித்தொழிலாளி. இவர்களுக்கு கமலி உள்ளிட்ட 4 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளான கமலி காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் 10ம் வகுப்பில் 485 மதிப்பெண்ணும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,120 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவி கமலி மருத்துவ சேர்க்கைக்கான நீட்தேர்வு எழுதினார். அதில் 385 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி கமலிக்கு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க கிடைத்துள்ளது. ஆனால், ஏழ்மை நிலையில் குடும்பச்சூழல் காரணமாக மாணவி கமலியால், கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மாணவி கமலி, கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு வழங்கினார். அதில், எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார். சிரமத்திலும் நான் உள்பட 4 பெண் குழந்தைகளை தற்போது வரை படிக்க வைத்து வருகின்றனர். நீட்தேர்வு மூலம் தேர்வான எனக்கு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைத்துள்ளது. ஆனால் சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம், தங்கு விடுதி, உணவு ஆகியவற்றுக்கு தேவையான கட்டணத்தை கட்ட முடியாத நிலையில் எனது குடும்பம் உள்ளது. எனவே, மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி