புனித பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

வாழப்பாடி, ஜூலை 16: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர்  பிறந்தநாள்  விழா வாழப்பாடியில் உள்ள புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது. வாழப்பாடியில் அரசு  மற்றும் தனியார்  பள்ளிகளில் பயிலும் 130 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள், முதல்முறையாக பள்ளிக்கு செல்லும் 37 குழந்தைகளுக்கு புத்தகப்பை, 10, 11, 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் நடந்தது. இவ்விழாவில் ராமன் மகசாசே விருதாளரும், கிருஷ்ணகிாியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐவிடிபி நிறுவன தலைவருமாகிய குழந்தை பிரான்சிஸ் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, வாழப்பாடி  ஆலய பங்குத்தந்தை ஜெகநாதன் விமல், காமராஜரின் வாழ்க்கை குறிப்பை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில்  வாழப்பாடி  அருகேயுள்ள சேசன்சாவடி   கிராமத்தை சேர்ந்த  11 பிள்ளைகளை கொண்ட ஏழை குடும்பத்திற்கு,  ஐவிடிபி  தொண்டுநிறுவன  உதவியுடன்  மக்களின் தன்னார்வ கொடை மூலம் 1000 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கப்பட்டது.  பெத்தநாயக்கன்பாளையம்   விடுதி காப்பகத்தில் பயிலும்   32 ஏழை குழந்தைகளுக்கு, 1  கிராமில் தங்கத்தோடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் அனைவரும், காமராஜர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Related Stories: