ஓமலூர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்

ஓமலூர், ஜூலை 16: ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் சாலைகள் பழுதடைந்து காணப்பட்டன. இதனால், கிராமங்களுக்கு செல்லும் அரசு மற்றும் மினி பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, முத்துநாயக்கன்பட்டி, ஆலக்கரடு, காமாண்டபட்டி, சிக்கம்பட்டி, கோட்டைமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கிராமங்களில், தார் சாலை அமைக்க ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு பூமி பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தார். பணிகளை துவங்கிய ஒப்பந்ததாரர்கள், ஏற்கனவே இருந்த தார்சாலையை பெயர்த்து, ஜல்லி கொட்டினர். ஆனால், சாலைகள் அமைக்காமல் கிடப்பில் போட்டனர். இதுவரை சாலை அமைக்கும் பணிகள் நடக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல், திண்டமங்கலம்-தொளசம்பட்டியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை, குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பணிகள் நடக்காததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க  எம்எல்ஏ வெற்றிவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது தான் புதிதாக பணியிட மாறுதலில் வந்துள்ளோம். சாலைகள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Related Stories: