மாநில விருதுக்கு அனுப்பிய சிவ தாண்டவ சிற்பத்தை சேதப்படுத்திய அதிகாரிகள்

சேலம், ஜூலை 16: மாநில விருதுக்கு அனுப்பிய சிவ தாண்டவ சிற்பத்தை சேதப்படுத்திய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம்  சிற்பி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். சேலம் செட்டிச்சாவடி மாந்ேதாப்பு பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த சிற்பி மணிகண்டன். இவர், சிவ தாண்டவமாடும் மரச்சிற்பத்தோடு நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் ராமனிடம் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு பூம்புகார் மாநில விருதுக்காக, கடந்தாண்டு ஜூலை மாதம் குமிழ் மரத்தின் மூலம் சிவ தாண்டவம் என்பதை மையமாக வைத்து சிற்பம் வடித்தேன். அந்த சிற்பத்தை சென்னை பூம்புகார் கைத்திறன் தொழில் வளர்ச்சி கழக அலுவலகத்தில், நல்ல முறையில் ஒப்படைத்தேன். அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டேன். ஆனால், நான் செய்த சிற்பத்தை அதிகாரிகள் உடைத்து, அதற்கு பரிசு கிடைக்காமல் செய்துவிட்டனர். அதே நேரத்தில் விதிமுறை மீறி செய்யப்பட்ட சிற்பத்திற்கு பரிசு வழங்கினர். இதுகுறித்து கேட்டபோது, பணத்தை கொடுத்து சிலையை வாங்கி கொள்கிறோம். ஆனால் விருது தர முடியாது என்று கூறி என்னை அனுப்பி விட்டனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒரே மரத்தில் குடைந்து இரவு பகலாக கண்விழித்து சிற்பத்தை செய்தேன். ஆனால், என் மனதை துன்புறுத்தி தகாத வார்த்தையால்  அதிகாரிகள் என்னை இழிவுபடுத்தி விட்டனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: