₹27 கோடி மதிப்பில் வீரகனூரில் புதிய அணை கட்ட சட்டப்பேரவையில் அறிவிப்பு

கெங்கவல்லி, ஜூலை 16: கெங்கவல்லி அருகே பச்சைமலை அடிவாரத்தில், ₹27 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, பொதுமக்கள், விவசாயிகள் பட்டாசு வெடித்து  கொண்டாடினர்.  கெங்கவல்லி தாலுகா அருகே, வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோயில் மற்றும் பச்சைமலை அடிவாரத்தில் புதிய அணை கட்டினால் பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாகவும், விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கடந்த 1989ம் ஆண்டு முதல் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து, இப்பகுதியில் அணை கட்ட தமிழக அரசு ஆய்வறிக்கை தயார் செய்து வந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று, பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், வீரகனூர் பொன்னியம்மன் பச்சைமலை அடிவாரத்தில், இரு மலைகள் இடையில் புதிய அணை கட்டுவதற்கு ₹27 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கி பேசினார். இதையறிந்த வீரகனூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து பொன்னியம்மன் அணைக்கட்டு நலச்சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘இங்கு அணை கட்டினால், ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நிலத்தடி நீரினால் வீரகனூரை சுற்றியுள்ள 10 கிராமங்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். 30 ஆண்டுகளாக எடுத்த முயற்சிகளுக்கான பலனாக, அணை கட்ட நிதி ஒதுக்கிய செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: