சாலையை சீரமைக்கக் கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மேட்டூர், ஜூலை 16: மேட்டூர் அருகே சாலையை சீரமைக்கக் கோரி, அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, கோனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிக்கரை, கல்லுக்கிணறு, மல்லக்கவுண்டர்தெரு, மங்கானூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் வசதிக்காக, தினமும் அப்பகுதியில் 5 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பஸ்கள் பாதியிலேயே நிறுத்தப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில், டூவீலர்களில் சென்றால், அடிக்கடி பஞ்சராகி விடுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, கல்லுக்கிணறு பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சாலையில் திரண்டனர். பின்னர், மேட்டூரில் இருந்து ஆண்டிக்கரை நோக்கிச் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கருமலைக்கூடல் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே, 2 மாத காலத்திற்குள் சாலைப்பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ,மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories:

>