விருத்தாசலம் பெரியகண்டியங்குப்பத்தில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் கடும் அவதி

விருத்தாசலம், ஜூலை 16: விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட  2வதுவார்டு பெரியகண்டியங்குப்பம் பகுதியில் சுமார் 3  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி அருகே சுமார் 20  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமைவாய்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த 20  ஆண்டுகளுக்கு முன்பு மக்கள்தொகை ஆயிரமாக இருந்தபோது  சுமார் 150  அடி ஆழத்தில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர்வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதால், நீர்தேக்க தொட்டியில் ஏற்றும் குடிநீர் மக்களுக்கு போதியஅளவு கிடைப்பதில்லை.  இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  மேலும் ஒருநாளைக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர்தொட்டியில் சுமார் 11  மணிநேரம் மின்மோட்டார் இயக்கினால் மட்டுமே ெதாட்டி நிரம்பும் அளவுக்கு குடிநீர் ஏற்றமுடிகிறது.  அந்தஅளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டது.  எனவே மின்மோட்டாரை அகற்றி விட்டு புதியபோர்வெல் அமைத்து 400  அடிக்கு மேல் புதியபோர்வெல் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்த பிறகும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.  

இந்நிலையில்கடந்த 2 நாட்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்து குடிநீர் ஏற்றமுடியாத நிலை ஏற்பட்டது.   இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அருகில்உள்ள பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீரை எடுத்து வருகின்றனர்.  மேலும் இப்பகுதியில் சுமார்  50க்கும் மேற்பட்ட செராமிக் தொழிற்பேட்டைகள் உள்ளதால் விருத்தாசலம் நகராட்சியிலேயே அதிக வருமானம் தரக்கூடிய பகுதியாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார் கூறுகையில், இப்பகுதியில் 2ஆப்ரேட்டர்கள் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு மகளிர் சுயஉதவிக்குழு மூலம் வெறும்  600  ரூபாய் மட்டுமே மாதசம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நாளுக்கு  200 வீதம் மாதம் 6000   ரூபாய் வரை சம்பளம் வழங்கினால் அவர்கள் பணியை ஒழுங்காக செய்வார்கள்.  மேலும் கடந்த  2 நாட்களாக இந்தபோர்வெல்லும் பழுதடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.   இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறைகூறியும் கண்டுகொள்ளவில்லை. டேங்கர்மூலமாக குடிநீர்  வினியோகம் செய்யப்பட  வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதையும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து விரைவில் உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெரியஅளவில் போராட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளோம் என்றார்.

Related Stories: