×

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை ஆணை பிறப்பிக்க வேண்டும்

புதுச்சேரி, ஜூலை 14: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி மற்றும் நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நிலம், நீர், காற்று ஆகியவற்றை கெடுப்பதோடு, வாழ்வாதாரத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்திற்குள் செயல்படுத்தமாட்டோம் என்று தாங்கள் எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை, ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதித்து ஒரு அரசாணையை அரசு வெளியிட்டால் அது மத்திய அரசின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த மிகவும் பயன்படும். அண்மையில் மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகலாந்தில் தடை ஆணை இருப்பதால் அங்கு ஹைட்ரோ கார்பன் ஏலம் விடவில்லை என கூறினார். எனவே, புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்காமல் தடுக்க தடை ஆணை பிறப்பித்து, புதுச்சேரியின் ஒரே நெற்களஞ்சியமாக திகழும் பாகூர் பகுதியையும், காவிரியின் கிளை ஆறான அரசலாறு கடலில் கலக்கும் காரைக்காலையும் பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவித்து, உழவர்கள், மீனவர்கள் மற்றும் அனைத்து மக்களின் வாழ்வுரிமையை காத்திட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...