பழைய நீதிமன்ற கட்டிடத்துக்கு அறிவுசார் பெயர் சூட்ட வேண்டும்

புதுச்சேரி, ஜூலை 16: புதுச்சேரியின் கடற்கரையொட்டிய குபேர் சாலையில் கம்பீரமாக நிற்கும் இந்தோ- பிரெஞ்சு கட்டிடக்கலையின் சாட்சியாக இருக்கும் கட்டிடம். வெறும் செங்கல்லையும், சுண்ணாம்பையும் மட்டும் கலந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமில்லை. வரலாற்றின் சுவடுகளையும், கடல் அலையின் ஓசையோடும் எழுப்பிக்கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டுகளில் பிரெஞ்சியர்களால் பல சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டன.அதுபோன்ற கட்டிடங்களில் ஒன்றான பழைய நீதிமன்றம் கட்டிடம் புதுச்சேரியின் சுதந்திரத்துக்கு 1954 முன்புவரை பிரெஞ்சியர் நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது. புதுச்சேரி இந்திய யூனியனோடு சட்டப்படி இணைக்கப்பட்ட 1962க்கு பிறகு இந்திய நீதிமன்றமாக செயல்படத்துவங்கியது. ஒன்றே கால் நூற்றாண்டு காலமாக பழைய கட்டிடத்தில் இந்திய நீதிமன்றமாக இயங்கி வந்திருக்கிறது மக்கள் தொகை அதிகரிப்பு, வழக்குகளின் எண்ணிக்கை உயர்வு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. 1969 மற்றும் 1976ம் ஆண்டுகளில் புதிதாக மேலும் 2 புதிய கட்டிடங்கள் நீதிமன்றத்துக்காக கட்டப்பட்டது. இந்நிலையில்  3 கட்டிடங்களும் இடவசதி குறைபாடு, பராமரிப்பு குறைபாட்டால் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு கடலூர் சாலையில் வனத்துறையையொட்டிய இடத்தில் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டு தற்சமயம் இயங்கி வருகிறது.இதன்காரணமாக கடற்கரை சாலையில் உள்ள பழைய கட்டிடம் மூடப்பட்டதால், பயன்பாடின்றி மேலும் சேதத்தை சந்தித்தது. இந்த இடம் நீதித்துறைக்கு உரிய இடம் என்பதால், பழைய நீதிமன்றம் நீதியரசர்களின் தங்குமனையாக மாற்ற  திட்டமிடப்பட்டது. அதன்படி பழமையான நீதிமன்ற கட்டிடம் ரூ.5 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் செலவில் பழமை மாறாமல் செப்பனிடப்பட்டு, புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது. புதுச்சேரி மக்களின் வரலாற்று அடையாளமாக திழும், இந்த நீதிமன்ற கட்டிடத்தின் நூலகம், தங்கும் அறைகள், அருங்காட்சியகத்துக்கு அறிவு சார் பெயர்களை சூட்ட வேண்டுமென தேசிய மரபு அறக்கட்டளை நிறுவனர் அறிவன் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  புதுச்சேரியின் வரலாற்று அடையாளமாக இருக்கும் நீதிமன்றத்தை 2012ம் ஆண்டு முதல் இந்தோ- பிரெஞ்சு அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சிகளை செய்தோம். இந்தியாவுடன் நட்பில் இருக்கும் பிரெஞ்சு அரசும் இதற்கு விருப்பம் தெரிவித்தது. நீதித்துறைக்கு உரிய இடம் என்பதால், அந்த நோக்கம் நிறைவேறவில்லை. இருப்பினும் பழைய நீதிமன்ற கட்டிடத்துக்கு அறிவுசார் பெயர்களை சூட்டுவதுதான், பொருத்தமாக இருக்கும்.

பிரான்சின் ஜன்னல் புதுச்சேரி என்பதை எண்ணத்தினை வெளிப்படுத்தும் வகையில், இந்தோ- பிரெஞ்சு உறவின் அடையாளமாக மக்களால் எண்ணிப்பார்க்கும்படி இந்தோ- பிரெஞ்சு தங்குமனை என்ற பெயரை கட்டிடத்துக்கு சூட்ட வேண்டும். பழைய நீதிமன்ற கட்டிடம் என்பது பிரெஞ்சியர்- பிரெஞ்சிந்தியர்களுக்கான உணர்வு, உரிமை சார்ந்த கட்டிடம். இது வெறும் பெயர்கள் அல்ல, புதுச்சேரி பண்பாட்டு விழுமியங்களின் எதிர்காலம். எனவே மத்திய, மாநில அரசுகளுக்கு மேற்கண்ட கோரிக்கைகளை தாழ்மையாக வைக்கிறேன் என்றார்.

Related Stories: