கல்வித்துறைக்கு ₹20 கோடி நிதி

காலாப்பட்டு, ஜூலை 16: புதுச்சேரி கல்வித்துறைக்கு வருகிற பட்ஜெட்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் சுனாமி குடியிருப்பில்இருந்து மாணவர்கள் செல்ல சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளானது மாணவர் தினவிழாவாக காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வி இயக்குநர் ருத்ர கவுடு வரவேற்றார். அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலர் அன்பரசு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு, காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேசிய திறனறி (2ம் நிலை) தேர்வில் புதுவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், தேசிய திறனறி (முதல் நிலை) தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், கட்டுரை, வினாடி- வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார். மேலும், தேசிய அளவில் நடத்தப்பட்ட கலாஉத்சவ் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய புதுவை மாணவர்களை பாராட்டினார். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் உரையாற்றும் தலைவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவார்கள். அதற்கு காரணம், காமராஜரின் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள், எல்லா திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. காமராஜருக்கும், புதுச்சேரிக்கும் நிறைய தொடர்பு உள்ளது. புதுவையில் ஜிப்மர் மருத்துவமனை அமைத்ததில் காமராஜருக்கு பங்கு உண்டு. மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் சிந்தித்த தலைவர்தான் காமராஜர்.

Advertising
Advertising

புதுச்சேரி மாநில கல்வித்துறையை பற்றி நாம் பெருமையாக கூற வேண்டும். கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்பார்த்ததைவிட பொதுத்தேர்வில் அதிகமாக தேர்ச்சியை பெற்றுள்ளோம். இதற்காக கல்வித்துறை அமைச்சர், செயலர் மற்றும் மாணவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள். மொத்தம் 30 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 10 ஆயிரம் பேர் ஆசிரியர்கள். நம்முடைய பட்ஜெட்டில் 12 சதவீதம் நிதியை கல்வித்துறைக்கு செலவு செய்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து நானும், அமைச்சர் கமலக்கண்ணனும் கலந்துரையாடினோம். அப்போது கல்வித்தரத்தை உயர்த்தவும், தேர்ச்சியை அதிகரிக்கவும் ஆலோசித்தோம். ஆசிரியர்கள் பெற்றோர்களோடும், மாணவர்களோடும்  தொடர்ந்து பேச வேண்டும். மாணவர்களின் திறனை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினோம். இதன் விளைவாக, தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதமும், 11ம் வகுப்பு தேர்வில் 89 சதவீதமும், 12ம் வகுப்பு தேர்வில் 85 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளோம். பொதுத்தேர்வில் மிகப்பெரிய வெற்றியை கல்வித்துறை கொடுத்துள்ளது.

 பள்ளி கட்டிடங்கள் சரியான முறையில் இல்லாததால், அதனை சீரமைக்கவும், கழிப்பறைகளை பராமரிக்கவும், தூய்மையான குடிநீர் வழங்கவும் கல்வித்துறைக்கு இந்தாண்டு அதிகப்படியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளோம். நிதி கொடுத்தால் மட்டும் போதாது, அதற்கான பலனை மாணவர்கள் கொடுக்க வேண்டியது முக்கியம்.  காலாப்பட்டில் முன் மழலையர் பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் கோரிக்கை வைத்துள்ளார். இதே பள்ளியில் முன் மழலையர் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமி குடியிருப்பிலிருந்து மாணவர்கள் செல்ல சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சுனாமி குடியிருப்பிலிருந்து உடனடியாக சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இணை இயக்குநர் குப்புசாமி நன்றி கூறினார்.மருத்துவ படிப்புக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடுபுதுச்சேரி, ஜூலை 16: புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஏஎம்எஸ் ஆகிய படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய

தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் புதுச்சேரி ஒதுக்கீடு - 126, அகில இந்திய ஒதுக்கீடு - 27, என்ஆர்ஐ - 27 என மொத்தம் 180 இடங்கள் உள்ளன. 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் தலா 55 சீட் வீதம் அரசு ஒதுக்கீடாக 165 எம்பிபிஎஸ் இடங்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக அரசு ஒதுக்கீட்டில் 291 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 285 இடங்கள் உள்ளன.

 இதேபோல், கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரியில் புதுவை ஒதுக்கீடு - 29, அகில இந்திய ஒதுக்கீடு - 5 என மொத்தம் 34 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 3 தனியார் பல் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 85 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 115 இடங்களும் உள்ளன. பிடிஎஸ் பாடப்பிரிவில் அரசு ஒதுக்கீடாக மொத்தம் 114 இடங்கள் உள்ளன. மேலும், மாகே ராஜீவ் காந்தி அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் புதுவை ஒதுக்கீடு - 42, அகில இந்திய ஒதுக்கீடு - 7 என மொத்தம் 49 பிஏஎம்எஸ் இடங்கள் உள்ளன.

 எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் ஆகிய பாடப்பிரிவுகள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பாடப்பிரிவில் சேர மாணவர்கள் கடந்த மாதம் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி நிறைவு பெற்றதையடுத்து, நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில்  1,735 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். ஆதியா (621), திருவரசன் (616), விஷாலினி (615), ஆனந்தகிருஷ்ணன் (613), திவ்யா (601) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். 600 முதல் 621 வரை 5 பேரும், 500 முதல் 599 வரை 22 பேரும், 400 முதல் 499 வரை 88 பேரும், 300 முதல் 399 வரை 266 பேரும், 200 முதல் 299 வரை 559 பேரும், 107 முதல் 199 வரை 995 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம்.

 இதேபோல் நிர்வாகம், தெலுங்கு மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி ஏஎச் ஆகிய பாடப்பிரிவுக்கான இறுதி தரிவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் நீட் மற்றும் நீட் அல்லாத பாடப்பிரிவில் தனித்தனியாக வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தாலும் இன்று மாலை 5 மணிக்கு தெரிவிக்கலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.

Related Stories: