×

வடலூர் சிறுவர் பூங்காவில் சமூக விரோதிகள் அட்டூழியம்

நெய்வேலி, ஜூலை 16: வடலூர் பேருந்துநிலையம் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சிறுவர் விளையாட்டு பூங்கா பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது. பூங்காவை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் இங்கு வந்து மது அருந்துவதால் சாலையில் செல்லும் பெண்கள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர், இந்த பூங்காவை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பூங்காவில் மாலைநேரங்களில் பொதுமக்கள் பயன்படுத்த அங்கு உட்காரும் சிமெண்ட் பெஞ்சுகள், சிறுவர்களுக்கான ஊஞ்சல், விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள், மக்கள் நடைபயண மேடை ஆகியவை முற்றிலும்  சேதமடைந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வடலூர் பேரூராட்சி  நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி இப்பூங்காவை சீரமைத்து, நடைபாதைகளை ஏற்படுத்தி தர பேரூராட்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கால்நடைகள் வராமல் தடுக்க பூங்காவை சுற்றி கம்பிவேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாற்று இடம் கோரி நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம், ஜூலை 16: சிதம்பரம்  நகரில் பாலமான் ஆறு, ஞானப்பிரகாசம் குளம், ஓமக்குளம், நாகச்சேரிகுளம்  உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வசிக்கும் குடும்பங்களுக்கு மாற்று மனை  வழங்கிய பிறகே குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி   சிதம்பரம்  சப்-கலெக்டர் அலுவலகம் அருகே புரட்சிகர சோசலிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர  செயலாளர் ஆதிமூலம் தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் கலியமூர்த்தி  ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். நிர்வாகிகள் வெற்றிக்குமார்,  ராமச்சந்திரன், மைனர், அருட்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் பொதுமக்கள்  கலந்து கொண்டு மாற்று இடம் வழங்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது