கலெக்டர் அலுவலகம் பின்புறம் கஞ்சா, மது விற்பனை அமோகம்: கண்டுகொள்ளாத போலீசார்

பாரிமுனை, ஜூலை 16: சென்னை கலெக்டர் அலுவலகம் பின்புறம் கஞ்சா, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. சென்னை பாரிமுனை பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிறு மற்றும் பெரிய மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்கு பொருட்களை வாங்கும் வியாபாரிகள், பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று தொழில் செய்கின்றனர். இதனால், இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

குறிப்பாக மண்ணடி மூர் தெரு பகுதியில் ஏராமான கடைகள், இரும்பு குடோன்கள் உள்ளன. இதனால் கட்டிடம் கட்டுவது, தொழிற்சாலைகளுக்கு தேவையான இரும்பு பொருட்களை வாங்குவதற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
Advertising
Advertising

இந்நிலையில், பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் பின்புறம், 2வது கடற்கரை சாலையில், சிலர் தள்ளுவண்டிகளிலும், குடிசை வீடுகளில் மறைத்து வைத்து மதுபானம், கஞ்சா, மாவா உள்பட பல்வேறு போதை பொருட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இதில், பெரும்பாலும் பெண்களே அதிகளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள் சிலர் இப்பகுதியில் வலம்  வருகின்றனர். இவர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுபற்றி போலீசாரிடம் புகார் செய்தாலும், பணம் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் போலீசார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: