சுடுகாட்டை குப்பை கிடங்காக மாற்ற எதிர்ப்பு ஆதம்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

ஆலந்தூர், ஜூலை 16: சென்னை ஆலந்தூர் 165வது வார்டுக்கு உட்பட்ட வாணுவம்பேட்டையில் 100 ஆண்டுகள் பழமையான மயானம் உள்ளது. தற்போது இதை சென்னை மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதியாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த மயான பூமியில் பிணத்தை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது. ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணபுரம் மற்றும் ஆதம்பாக்கம் கண்ணன் காலனியில் உள்ள மின் எரிமேடையில்தான் பிணங்களை எரிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை மற்றும் முத்தியால் ரெட்டி தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆதம்பாக்கம் 100 அடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்தால்தான் கலைந்து செல்வோம் என்று மறியல் நடத்தியவர்கள் கூறினர்.இதையடுத்து மாநகராட்சி சுகாதார அலுவலர் விரைந்து வந்து, ‘இது அரசு உத்தரவு. இங்கு பிணங்களை எரிக்க அனுமதிக்க மாட்டோம்’ என்றனர். அப்போது மக்கள், ‘’எங்கள் பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கக்கூடாது. மயான பூமியில் மின்தகன மேடை அமைத்து கொடுக்க வேண்டும்’ என்றனர். ‘இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் மனு கொடுங்கள்’ என சுகாதார அலுவலர் தெரிவித்ததையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

× RELATED பெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய...