போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் கடும் அவதி மத்தியகைலாஷில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம்: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை, ஜூலை 16: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன்(திமுக) பேசியதாவது: சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மத்திய கைலாஷ் பகுதியில் ராஜிவ்காந்தி சாலை, கெனால் பேங்க் சாலை, காந்தி மண்டபம் சாலை சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்க அரசு முன்வருமா?. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: மத்திய கைலாஷ் ராஜிவ்காந்தி சாலை, கெனால் பேங்க் சாலை,  காந்தி மண்டபம் சாலை சந்திப்பில் ‘’எல்’’ வடிவ மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தவுடன், நடைமேம்பாலம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.மா.சுப்பிரமணியன்: மத்திய கைலாஷ் பகுதியில் ராஜிவ்காந்தி சாலை, கெனால் பேங்க் சாலை, காந்தி மண்டபம் சாலை ஆகிய 3 சாலை சந்திப்பு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி பகுதியாகும். கெனால் பேங்க் சாலையில் இருந்து செல்பவர்கள், சிஎல்ஆர்ஐ குடியிருப்பில் இருந்து விஎச்எஸ் போன்ற அமைப்புகளுக்கு செல்பவர்கள், இந்திய அரசு தொழிலாளர் அமைச்சகத்தின் மண்டல தோலியல் நிலையத்திற்கு செல்பவர்கள் மிக பெரிய அளவில் சிரமப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் கோட்டூருக்கும், அடையாருக்கும் செல்வதற்கு சாலையை கடக்க வழியின்றி அவதிப்படுகிறார்கள். எனவே, எஸ்குலேட்டர் வசதியுடன் கூடிய நடைமேம்பாலத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: எஸ்கலேட்டர் மேம்பாலம் அமைக்க பொதுமக்களிடம் கருத்து கட்டு, அவசியம் இருப்பின் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.மா.சுப்பிரமணியன்: சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜவகர்லால் நேரு பிரதான சாலை, அம்பாள் நகர் ஒரு நெருக்கடி மிகுந்த பகுதி. எனவே, ஜவகர்லால் நேரு சாலையில் சுரங்கபாதையோ அல்லது எஸ்குலேட்டர் வசதியுடன் கூடிய நடைமேம்பாலமோ கட்ட வேண்டும்.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: நடைமேம்பாலம் அல்லது எஸ்குலேட்டர் மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: