ஐஓசி பஸ் நிலையம் பகுதியில் கச்சா எண்ணெய் பைப்லைன் அருகே தீவிபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு

தண்டையார்பேட்டை, ஜூலை 16: தண்டையார்பேட்டை ஐஓசி பஸ் நிலையம் அருகே ரயில்வே டீசல் இன்ஜின் பழுதுபார்க்கும் நிலையம் உள்ளது. இதன் அருகே குப்பை கழிவுகள், காய்ந்த மரங்களை குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு, மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பையை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. காற்றில் தீ மளமளவன பரவி காய்ந்த மரங்களும் எரிய தொடங்கின. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வந்து, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தீ விபத்து நடந்த இடத்தின் அருகே சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ராட்சத பைப் லைன் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், இன்ஜின் ஆயிலை குழாய் மூலம் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு எடுத்து செல்லும் பைப் லைன்களும் இதே பகுதியில் செல்கின்றன.

மேலும் பழுதடைந்த டீசல் இன்ஜின்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தில் தீ மேற்கண்ட பைப் லைன்களில் தீப்பற்றி இருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். அருகில் உள்ள கருணாநிதி நகர், நேதாஜி நகர், படேல் நகர், இந்திரா காந்தி நகர் ஆகிய பகுதி மக்களுக்கு பெரிய ஆபத்தை விளைவித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விரைந்து தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதி வழியாக குழாய் மூலம் மத்திய அரசு நிறுவனங்களுக்கு பெட்ரோல், இன்ஜின் ஆயில் கொண்டு செல்லப்படுகிறது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் பெரும் விபத்து நிகழ வாய்ப்புள்ளது. இதனால், தினமும் அச்சத்தில் வசிக்கிறோம். எனவே, ஆயில் செல்லும் பைப்லைன் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: