தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி: மழைக்காலத்திற்குள் முடிப்பதில் சிக்கல்

தாம்பரம், ஜூலை 16: தாம்பரம் இரும்புலியூர் ஏரியில் இருந்து அடையாறு ஆறு வரை அமைக்கப்படும் மழைநீர் கால்வாய் பணி, ஒரு வருடத்தை கடந்தும் இதுவரை 50 சதவீதம் கூட முடிக்கப்படாததால், வரும் மழைக் காலத்திற்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் இரும்புலியூர் ஏரி மழைக்காலங்களில் நிரம்பினால், அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக சென்று அடையாற்றில் கலந்து வந்தது. நாளடைவில் இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமானதால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது.  இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலை, கிருஷ்ணா நகர், சிடிஓ காலனி, கண்ணன் அவென்யூ, பாரதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், வீடுகளில் இருந்த உடமைகளை இழந்து கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, இரும்புலியூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் நேரடியாக அடையாற்றில் சென்று கலக்கும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்தது.

அதன்பேரில், இரும்புலியூர் ஏரியில் இருந்து அடையாறு ஆறு வரை, சுமார் 3 கி.மீ., தூரத்துக்கு, சாலைக்கு அடியில் (கட் அண்ட் கவர் முறையில்) மழைநீர் கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டது. மேலும், பெருங்களத்தூர் பகுதியில் இருந்து பாப்பான் கால்வாய் வழியாக வெளியேறும் நீரும் இந்த புதிய கால்வாயில் கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.  இதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. சாலைக்கு அடியில் 4 அடி அகலமும், 2.5 அடி ஆழமும் கொண்டதாக அமைக்கப்பட்டு வந்த இந்த கால்வாய் பணி 6 மாதங்களில் முடிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை 50 சதவீத பணி கூட முடியாமல் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருகிறது.தற்போது, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சிடிஓ காலனி அருகே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், வரும் மழைக்காலத்திற்குள் கால்வாய் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதிதாக அமைக்கப்படும் மழைநீர் கால்வாய், கான்கிரீட் கொண்டு அமைத்தால் கால தாமதம் ஏற்படும் என்பதால், ஏற்கனவே தயாரித்த ‘ப’ வடிவிலான கான்கிரீட் டெக்குகளை கொண்டு வந்து, சாலையில் பள்ளம் தோண்டி உள்ளே வைத்து மூடும் முறையில் மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்த பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகியும் இதுவரை 50 சதவீதம் கூட முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் மழைக்காலத்திற்குள் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றனர்.

எம்எல்ஏ ஆய்வு

மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெறுவது குறித்து அப்பகுதி மக்கள், தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் முறையிட்டனர். அதன்பேரில், பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்ற எம்எல்ஏ,  பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை  தொடர்பு கொண்டு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: