₹10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்துவோரிடம் காசோலையாக பெற மின்வாரியம் திட்டம்: முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை

சென்னை, ஜூலை 16: மின்வாரியத்தில் ₹10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடமிருந்து, காசோலை அல்லது வரைவோலை மூலமாக பணத்தை பெற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளும், 21 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சத்திற்கும் அதிகமான வணிகம் சார்ந்த இணைப்புகளும் உள்ளன. மேலும், தினம்தோறும் புதிதாக பலர் மின் இணைப்பு பெற்று வருகின்றனர்.

நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான ெதாகையை தங்களது பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி வருகின்றனர். அதேபோல், புதிய இணைப்பு பெறுவோரும் அதற்கான கட்டணம், வைப்புத்தொகை போன்ற கட்டணங்களை இங்கு செலுத்துகின்றனர். இதேபோல், உள்ளாட்சி அமைப்புகளும் லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக செலுத்தி வருகிறது. இவ்வாறு செலுத்தப்படும் தொகைகள் பல்வேறு அலுவலகங்களில் இருந்து முறையாக அரசுக்கு சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதாவது நுகர்வோரிடமிருந்து பெறும் வசூல் தொகையை, வாரியத்தில் பணியாற்றும் சிலர் எடுத்து செலவு செய்து விட்டு, பிறகு கட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
Advertising
Advertising

 

இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன், அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நுகர்வோர் செலுத்தும் பணம் தாமதமாக செல்வதால், வாரியத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க பல்வேறுகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதன்படி, ₹10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்துவோரிடம், அந்த தொகையை ரொக்கமாக பெறாமல் காசோலை அல்லது வரைவோலை மூலமாக அதிகாரிகள் பெற வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, இந்த புதிய நடைமுறைப்படி பல அலுவலகங்களில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில், ஆங்காங்குள்ள மின்வாரிய அலுவகங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘₹10,000க்கு மேல் பணம் செலுத்துவோர், காசோலை அல்லது வரைவோலை மூலமாக பணம் செலுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தை ஒருசிலர் எடுத்து செலவு செய்து விட்டு இறுதிநாளில் செலுத்துவதால் வாரியத்திற்கு பணம் உடனே கிடைக்காமல் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ₹10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்துவோரிடம் காசோலை அல்லது வரைவோலை மூலமாக பணத்தை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: