×

சொத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் கார் முன் உட்கார்ந்து தர்ணா

திருவள்ளூர், ஜூலை 16: தங்களுக்கு சொந்தமான சொத்தினை மீட்டுத்தரக்கோரி, திருவள்ளூரில் கலெக்டர் கார் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் சகோதரிகள் இருவர் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதிசாமி தெருவை சேர்ந்தவர்கள் இந்துமதி, சுஜாதா. சகோதரிகளான இவர்களுக்கு சொந்தமாக கிருஷ்ணன் தெரு, பழைய பஜார், ம.பொ.சி.சாலை ஆகிய பகுதிகளில் காலி மனைகள் உள்ளன. இந்த மனைகளை, அதே பகுதியை சேர்ந்த யோகலட்சுமி, சந்தோஷ் மற்றும் திவாகர் ஆகியோர் ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சொத்துக்களை காப்பாற்ற திருத்தணி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தங்களது சொத்துகளை பதிவு செய்யக்கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைந்த விலைக்கு எங்களது  சொத்துகளை விற்க யோகலட்சுமி முயற்சித்து வருகிறார். எனவே, தங்களக்கு சொந்தமான சொத்தினை மாவட்ட கலெக்டர் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, இந்துமதி, சுஜாதா ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டரின் கார் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக்கண்ட திருவள்ளூர் டவுன் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை தொடர்ந்து, சகோதரிகளை போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...