×

ஜெ.என்.சாலையில் வங்கிகள் முன் நிற்கும் பைக்குகள் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்து அபாயம்: கண்டும் காணாமல் போலீசார்

திருவள்ளூர், ஜூலை 16: திருவள்ளூர் நகரில் ஜெ.என்.சாலையில் வங்கிகள் முன் நிறுத்தப்படும் பைக்குகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தினமும் பல்வேறு விபத்துகளும் நடந்துவருகிறது. இதை, நகர போக்குவரத்து போலீசார் கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் ஸ்டேட் பேங்க் உட்பட பல்வேறு வங்கிகள், தபால் நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, அரசு பஸ் டெப்போ, பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை உட்பட அரசு அலுவலகங்கள் உள்ளன.இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதனால், இச்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

இந்நிலையில், ஸ்டேட் பேங்க் வரும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள், தினமும் தங்களது இருசக்கர வாகனங்களை நெடுஞ்சாலையில் நிறுத்திவிட்டு வங்கிக்கு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன்,  பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதை நகர போக்குவரத்து போலீசாரும் கண்டும், காணாமல் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தினமும் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. வங்கிக்குள் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்த ‘’பார்க்கிங்’’ வசதி இருந்தும், வங்கி பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் வாகனங்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.எனவே, விபத்துகளை தடுக்கும் வகையில், ஸ்டேட் வங்கி முன் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை செய்யவேண்டும். வாடிக்கையாளர்களின் வாகனங்களை வங்கி ‘’பார்க்கிங்’’ல் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...