×

சூனாம்பேடு - தொழுப்பேடு சாலையில் சாய்ந்துள்ள டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம்: மின்வாரியம் மீது குற்றச்சாட்டு

செய்யூர், ஜூலை 16: சூனாம்பேடு - தொழுப்பேடு செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்து வயல்வெளி பகுதியில் விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடைகள் மேய்போர் பெரும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். சூனாம்பேட்டில் இருந்து தொழுப்பேடு செல்லும் சாலையில் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு நுகும்பல் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இருபது வருடங்களுக்கு முன் சூனாம்பேட்டில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் தொழுப்பேடு செல்லும் நெடுஞ்சாலை ஓரம் மின் வாரியத்தால் இரும்பால் ஆன டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், மண் பிடிப்பு பலம் இழந்ததால் டிரான்ஸ்பார்மர் சாலை ஓரம் உள்ள வயல்பகுதியை நோக்கி சாய்ந்த நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் டிரான்ஸ்பார்மர் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் மேய்பவர்கள் டிரான்ஸ்பார்மர் எப்போது தங்கள் மீது சாய்ந்து விழுமோ என்ற அச்சத்துடன் வயல்வெளியில் நடமாடி வருகின்றனர்.

தற்போது, அவ்வப்போது மழை பொழியும் நேரங்களில் பலத்த காற்று வீசுவதால் விவசாயிகள் வயல்பகுதிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்களிடையே புகார்கள் எழுந்துள்ளது. மேலும், டிரான்ஸ்பார்மர் சாய்ந்து விழுந்தால் பெருத்த உயிர் சேதங்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடைகளை அச்சுறுத்திவரும் இந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு