×

அத்திரவரதர் வைபவ விழாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரம் அத்தி வரதர் விழாவில் பயணிகளிடம் அதிக கட்டணங்களை வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்ததாவது: அத்தி வரதர் வைபவத்தில் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதுவரை 15 நாட்களில் சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர். வாரந்தோறும், மாவட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்தி, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பகலில் குவிந்த குப்பையை, இரவில், நான்கு மணி நேரத்தில் அகற்றப்படுகிறது. நகரில், 20 மினி பஸ் இயக்கப்பட்டது. தற்போது 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 மொபைல் ஆம்புலன்ஸ், 10 பைக் ஆம்புலன்ஸ் ஆகியவை, தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கைக்குழந்தை வைத்திருப்போர் வசதிக்காக, ஆன்லைன் சேவை தொடங்கப்பட உள்ளது. இச்சேவை நடைமுறைக்கு வந்ததும், இவர்கள், அத்தி வரதரை விரைவாக தரிசிக்கலாம்.

கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட தூரம் நிற்பதை தவிர்க்க, கோவிலுக்குள்ளேயே, 4,500 பேர் வரிசையில் செல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் போதிய இடவசதி செய்வதால், இரவு 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு, கிழக்கு கோபுர கதவு மூடப்படும். இரவு 9 மணிக்கு, கோவிலுக்குள் வரும் பக்தர்கள் தரிசனம் முடித்துவிட்டுச் செல்ல இரவு 11 மணி ஆகும். மேலும் கைக்குழந்தைகள் வைத்திருப்போர் ஆட்டோக்களில் செல்லும்போது அதிக கட்டணம் வசூலித்தால் அந்த ஆட்டோ ஓட்டுனர்களை, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போலி பாஸ் பயன்படுத்தியதாக, ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் மற்றும் பழைய ரயில் நிலையங்களில் இருந்து 2 பேருந்துகள் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இயக்கப்படும். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் சனி ஞாயிறுகளில் குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...