×

அழிசூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

உத்திரமேரூர், ஜூலை 16: உத்திரமேரூர் அருகே அழிசூர் கிராமத்தில், ஸ்ரீபிடாரி செல்லியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீபிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது. செல்லியம்மனை இந்த கிராம மக்கள் காவல் தெய்வமாக வழிபாட்டு வருகின்றனர். இந்த கோயிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி கோயிலில் உள்ள ஸ்ரீபிடாரி செல்லியம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்த பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காப்பு கட்டிய நாள் முதல் தினமும் இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், அம்மன் பைரவி, சிவசக்தி, காயத்திரி, காளி, மஹிஷாசுரமர்த்னி என பல்வேறு அவதாரங்களில் அலங்காரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 10ம் நாளான நேற்று மதியம் விரதமிருந்த பெண்கள் கோவில் வளாகத்தில் ஊரணிப் பொங்கலிட்டும், வேப்பிளை ஆடை அணிந்து தங்களது நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபிடாரி செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்த பின் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பூக்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அப்போது, பக்தர்கள் தீபாராதனைக் காட்டி தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். கிராமங்கள் முழுவதும் தேரில் ஊர்வலம் வந்த அம்மன் இரவு 12 மணியளவில் கோயிலை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் கட்டைக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் 10 நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த விழாவில் அழிசூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...