×

செங்கல்பட்டு அடுத்துள்ள பரனூர் சுங்கச் சாவடியை மூடவேண்டும்: பேரவையில் க.சுந்தர் எம்எல்ஏ கோரிக்கை

காஞ்சிபுரம், ஜூலை 16: செங்கல்பட்டு அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியை மூடவேண்டும் என்று சட்டப்பேரவையில் க.சுந்தர் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் உத்திரமேரூர் தொகுதி திமுக எம்எல்ஏ க.சுந்தர் பேசியதாவது: காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரையும், திருவாரூர் ரயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயரையும் சூட்ட இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செங்கல்பட்டு அடுத்த பரனூரில் கடந்த 30 ஆண்டுகளாக டோல் பிளாசாவில் சுங்கவரிக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 400 அடி ரிங் ரோடிலும் சுங்க வரி வசூலிக்க சாலையை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாகத் தமிழகத்தில் உள்ள எல்லா டோல் பிளாசாக்களையும் மூடவேண்டும் என்பது பொதுமக்களுடைய விருப்பம். அதில் பரனூரில் உள்ள டோல்பிளாசாவை முதலில் மூடவேண்டும் என்பது என் கோரிக்கை.செய்யூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அரசு அக்கறை செலுத்தவில்லை. மதுராந்தகம் ஏரியைத் தூர்வார வேண்டும் என்று எங்களுடைய மதுராந்தகம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருக்கிறார். அதேபோன்று உத்திரமேரூர் ஏரியையும் தூர்வார வேண்டும். இந்த இரண்டு ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளாக இருக்கின்றன. எனவே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உத்திரமேரூர் - வாலாஜாபாத் புறவழிச்சாலை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவல்துறையில் ஆய்வாளர்கள் 100 பேருக்குமேல் டிஎஸ்பி பதவி உயர்வு வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. உடனடியாக பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 73 ஊராட்சிகளை கொண்ட பகுதி. எனவே, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தைரியம் உங்களுக்கு இல்லை. தண்ணீர் பிரச்னை வரக் காரணமே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே என எங்கள் தலைவர் கூறியிருக்கிறார். காஞ்சிபுரத்தில் அண்ணா பெயரில் ஒரு கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் 2017-18ம் ஆண்டில் 2.53 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுசம்மந்தமாக புகார்கள் அளிக்கப்பட்டு கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக் குழுதான் தவறு இழைத்துள்ளது. சங்கத்தின் தலைவராக இருந்தவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிற இயக்குநர்கள் மீது நடவடிக்கை இல்லை. கூட்டுறவு சங்க விதிகளின்படி நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2009ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா அமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக 72 ஏக்கர் நிலம் ஒதுக்கி பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து 8 ஆண்டுகளில் சுற்றுச் சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. பட்டுப்பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவே திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையில் க.சுந்தர் எம்எல்ஏ பேசினார். 

Tags :
× RELATED தொழிற்சாலைகளில் பணிபுரியும்...