தமிழகத்தில் 50 ஊராட்சிகளில் புதிய அலுவலக கட்டிடங்கள் 263 ஊராட்சி அலுவலக பராமரிப்புடன் கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்க முடிவு 95.64 லட்சம் நிதி ஒதுக்கி ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு

வேலூர், ஜூலை 16:மாநிலம் முழுவதும் தேசிய கிராம சுயாட்சி திட்டம் ஆர்ஜிஎஸ்ஏ திட்டத்தின் கீழ் முற்றிலும் பழுதடைந்த 50 ஊராட்சி மன்ற கட்டிடங்களுடன், 263 கிராம ஊராட்சி மன்ற கட்டிடங்களில் பராமரிப்புப்பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் செயலர் உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் சரியாக மேற்கொள்ளப்படுவதையும், அதற்கான நிதி செலவினங்கள், பணபரிமாற்றங்கள் என அனைத்தும் ‘பப்ளிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ கண்காணிக்கப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சி மன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.ஆனாலும், பெரும்பாலான ஊராட்சிகளில் கட்டிட வசதி, கணினி பராமரிப்பு உட்பட பல்வேறு நிலைகளில் மேற்கண்ட கண்காணிப்புப்பணியில் சுணக்கம் ஏற்படுவதாக தெரிய வந்தது. மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தில் மறுகட்டமைப்புப்பணிகளை மேற்கொள்ள மத்திய பஞ்சாயத்துராஜ் துறை முடிவெடுத்துள்ளது. இப்பணிகளை 60:40 என்ற மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 31.03.2022 தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிடப்படும் ஊராட்சிகளில் இப்பணி மேற்கொள்ளப்படும். அதன்படி 2018-19ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ள 50 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்கள் தலா ₹17.64 லட்சம் என மொத்தம் ₹8.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படுகிறது. அதேபோல் 76 கிராம ஊராட்சி மன்ற கட்டிடங்கள் தலா ₹3.20 லட்சம் என மொத்தம் ₹2.43 கோடி மதிப்பீட்டில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 186 ஊராட்சிகளில் தலா ₹40 ஆயிரம் என மொத்தம் ₹74.80 லட்சம் மதிப்பீட்டில் கம்ப்யூட்டர், ஸ்கேனர், நகல், பிரின்ட் எடுக்கும் வசதியுடன் கூடிய மல்டி பங்ஷன் பிரின்ட்ர், யுபிஎஸ் சாதனம் ஆகியவை வழங்கப்படுகிறது.அதன்படி, வேலூர், திருவண்ணாமலையில் தலா 3 ஊராட்சி மன்ற கட்டிடங்கள் புதிதாக கட்டப்படுவதுடன், தலா 5 ஊராட்சி மன்ற கட்டிடங்களில் பராமரிப்புப்பணியும் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் 10 ஊராட்சிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ஊராட்சிகளுக்கும் கம்ப்யூட்டர் சாதனங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக கிராம சுயாட்சி திட்டத்தின் மாநில நிர்வாகக்குழு பரிந்துரையின் கீழ் கிராமங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலர் கே.பாஸ்கரன் பிறப்பித்துள்ளார்.

Related Stories: